×

தொழில் முனைவோர்களுக்கான “வழிகாட்டி மென்பொருள்” இணைய தளத்தினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு  மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டினை வெளியிட்டு, புத்தொழில் ஆதார மானிய நிதியினை (TANSEED) வழங்கி, தொழில் முனைவோர்களுக்கான “வழிகாட்டி மென்பொருள்” இணைய தளத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு  மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினை வெளியிட்டார்.

மேலும், 25 நிறுவனங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதியினை வழங்கி, தொழில் முனைவோர்களுக்கான “வழிகாட்டி மென்பொருள்” தளத்தினை தொடங்கி வைத்தார். பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு  மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேடு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக  கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை கொண்ட கையேட்டினை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு டான்சீட்  எனும் தமிழ்நாடு அரசு புத்தொழில் ஆதார மானிய நிதி திட்டத்தின் கீழ் மானியமாக 10 இலட்சம் ரூபாய்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசாணையின் மூலம், நிலைத்த நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்ற மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுழற்சி பொருளாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இயங்கும் பசுமைத் தொழில் நுட்ப  புத்தொழில் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும்  முதன்மை பங்குதாரர்களாக பெண்களைக் கொண்டிருக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு,  டான்சீட் மானிய நிதி 10 இலட்சம் ரூபாயிலிருந்து 15 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.  

தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக இந்த மானிய நிதி வழங்கப்படும். மேலும், ஒரு நிதி ஆண்டில் டான்சீட் மானிய நிதி திட்டத்தில் பயன்பெற தேர்ந்தெடுக்கப்படும்  நிறுவனங்களில் 25 சதவீதம் பெண்களை   முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கும், 10 சதவீதம் ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும். மாநில அரசின் உதவியுடன் இயங்கி வரும் தொழில் வளர் காப்பகங்களில், பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்டணம் மற்றும்  ஓராண்டுக்கான வாடகைக் கட்டணம் (ரூபாய் 2 இலட்சம் வரை) இல்லாமல் பணிபுரிவதற்கான இடம் வழங்கப்படும்.

மேலும், பெண்களின் நலன் சார்ந்த தயாரிப்புகள்/சேவைகளை வழங்கும் பெம்டெக்(femtech) நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சிகள் வழங்குதல்,  தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளத்தின் வழியே முதலீடு திரட்டுவதற்கான உதவிகள் வழங்குதல் என பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான  இந்த சிறப்பு சலுகைகளை பெற  நிறுவனத்தின் 75 சதவீத பங்கு பெண்களுக்குரியதாக இருக்க  வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் சார்ந்து,  வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான திட்டங்களுக்கு பசுமை காலநிலை நிதி திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படும், பசுமை தொழில் நுட்ப தயாரிப்புகளை / சேவைகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக அரசு கொள்முதல் உதவி மையமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மற்றும் மதுரை அலுவலகங்களில் அமைக்கப்படும்.

இம்மையங்களின் வாயிலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது பசுமை தொழில்நுட்ப தயாரிப்புகளின் செயல்பாட்டினை பரிசோதித்து பார்க்க அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக வழிவகை செய்யப்படும். ஆண்டிற்கு, 20 பசுமை தொழில் நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஓராண்டுகால தொழில் விரைவாக்க (Accelerator) பயிற்சி வழங்கப்படும். காலநிலை மாற்ற மேலாண்மை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும். ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் தங்களது புத்தாக்க தொழில் மாதிரிகளை பரிசோதித்து பார்க்க அரசின் வழியே உதவிகள் வழங்கப்படும். மேலும் “ஊரக தொழில் நிறுவனங்கள் சூழமைவு மேம்பாடு திட்டத்தின்” கீழ் இந்நிறுவனங்களுக்கான சந்தைகளை உருவாக்குதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல், தொழில் விரிவாக்க பயிற்சிகள் வழங்குதல், ஹேக்கத்தான் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய நிதி தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தகுதியான நிறுவனங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் மானிய நிதியாக “தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி - TANSEED” திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 பதிப்புகளில் 60 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.
தற்போது, டான்சீட் 4-வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜுலை முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 1029 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. பல கட்டமாக நடைபெற்ற மதிப்பீட்டு பணிக்கு பின்பு முதற்கட்டமாக பசுமை தொழில் நுட்பம் சார்ந்து இயங்கும் 7 நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் 8 நிறுவனங்கள் மற்றும் பெண்களை நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களாக கொண்டிருக்கும் 10 நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் தலா 5 இலட்சம் ரூபாய் என மொத்தம் 1.25 கோடி ரூபாய் மானிய நிதியினை வழங்கினார்.

வழிகாட்டி மென்பொருள் இணையதளம் தொடங்கி வைத்தல்

புதுயுக தொழில்முனைவு பயணத்தில்,தொழில்முனைவோர்களுக்கு  துறைசார் அறிவும், அனுபவமும், கூர்நோக்கும் கொண்ட வல்லுநர்களின் வழிகாட்டுதல் அவசியம் ஆகும். தகுந்த வழிகாட்டுதலை எதிர்பார்க்கும்  தொழில் முனைவோர்களையும், வழிகாட்ட தயாராக இருக்கும் அறிவுரைஞர்களையும் இணைக்கும் “Mentor TN”  என்ற வழிகாட்டி மென்பொருள்  இணையதளத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். புத்தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனம் சார்ந்த தகவல்களை பதிவேற்றியதும்,  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் அவர்களது துறை சார்ந்த அறிவுரைஞர்கள் குறித்த தகவல்களை பெறும்வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stalin , Chief Minister M.K.Stalin launched the 'Guide Software' website for entrepreneurs
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...